டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, விஏஓ, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக திருச்சி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த விமல்குமார் என்பவரை முசிறி அடுத்த மங்கலம் கிராமத்தில் கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்ட அடுத்த சில நாளிலே சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் செல்வேந்திரன் என்பவர் சரணடைந்தார்.
நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்ட செல்வேந்திரனை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இந்தநிலையில் செல்வேந்திரன் பற்றிய சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. செல்வேந்திரன் திருச்சியை அடுத்த துறையூர் அருகே உள்ள மூவானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து வருகிறார்.
நெடுஞ்சாலைத் துறை ஊழியர் விமல்குமாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்தபோது... துறையூர் தமிழாசிரியர் செல்வேந்திரனிடம் ரூபாய் 7 லட்சம் கொடுத்து அலுவலக உதவியாளராக வேலைக்கு சேர்ந்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் தமிழாசிரியர் செல்வேந்திரன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். செல்வேந்திரன் தன் மனைவிக்கும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாக நம்பிக்கை கொடுத்ததால் செல்வேந்திரன் பலரிடம் அரசு வேலைக்கு பணம் வாங்கும் புரோக்கராக மாறியிருக்கிறார்.
தமிழாசிரியர் செல்வேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் இன்னும் பல கருப்பு ஆடுகள் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.