
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பத்து நகரங்களில் மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் வடிவமைப்பதற்கான 100 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் நூறு நகரங்களை தேர்வு செய்து, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து நவீன நகரங்களாக மாற்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டம், மத்திய அரசால் கடந்த 2015ல் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட பத்து நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த நகரங்களில் மின்னணு நிர்வாக வசதியை ஏற்படுத்தவும், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் ஆப் வடிவமைப்பதற்கும் தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், ஒப்பந்த புள்ளிகள் கோரியது.
நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரில் பல நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த போதிலும், இந்த திட்டத்திற்கு லார்சன் அண்ட் டியூப்ரோ எனும் எல் அண்ட் டி நிறுவனத்தை தேர்வு செய்யும் வகையில், அந்நிறுவனத்தை குறைந்த தொகையை குறிப்பிட்ட நிறுவனமாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கோவையைச் சேர்ந்த ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, டெண்டர் நடைமுறைகள் வெளிப்படையாக நடைபெறவில்லை எனவும், ஒப்பந்தப் புள்ளிகளின் தொழில்நுட்ப தகுதி உள்ளிட்ட அம்சங்கள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை எனவும் மனுதாரர் நிறுவனம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, இந்த டெண்டர் மீதான மேல் நடவடிக்கைகளை தொடரக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.