கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. அதை மது, மாமிசம் இல்லாத புனித நகரமாக அறிவிக்கக்கோரி சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வடலூர் நகரை மது, மாமிசம் இல்லாத புனித நகராக அறிவிக்கக்கோரி த.வா.க மாநில நிர்வாகக்குழு தலைவர் திருமாவளவன் தலைமையில் வடலூர் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 250- க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர். சாலை மறியலில் செய்தவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய த.வா.க மாநில நிர்வாகக்குழு தலைவர் திருமாவளவன், " வடலூரில் உள்ள இறைச்சி கடைகள், மதுக்கடைகள் நகருக்கு வெளியே கொண்டு செல்லவேண்டும்.
அசைவ உணவகங்கள் தவிர்க்கப்பட வேண்டும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வடலூரை புனித நகரமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களுடைய அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக அமையும்" என்று கூறினார்.