தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தொல்லியல் அலுவலர்கள் பணிக்கான டி.என்.பி.சி தேர்வில், முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ், மாவட்டம்தோறும் காலியாக உள்ள 18 தொல்லியல் அலுவலருக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தேர்வு நடத்துவதற்கான விளம்பரம் 28.11.2019 அன்று வெளியிட்டு, 29.02.2020 அன்று தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவு 30.09.2020 அன்று வெளியானது.
இதில், 300 பேர் தேர்வு எழுதியதில், 145 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 'டாக்'டிவி இ-சேவை மையம் மூலம், சரிபார்ப்புக்கான சான்றிதழ்களை அனுப்பி வைக்க 05.11.2020 வரை காலக்கெடு வழங்கப்பட்டது. இதன்படி சான்றிதழ்களை அனுப்பிய மாணவர்களை நேர்முகத் தேர்விற்கு, அவர்கள் பெற்றுள்ள ரேங்க் அடிப்படையில் அழைக்காமல் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ் இலக்கியம் முதுகலை பட்டப்படிப்பு பயின்றவர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் வழங்கப்படும் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் முதுகலை பட்டயப் படிப்பைப் பயின்றவர்கள், இந்தப் பணியிட வாய்ப்பிற்கு முன்னுரிமை பெற்றவர்கள்.
அதேபோல, தமிழ் இலக்கியம் முதுகலை பட்டப் படிப்பிற்கு இணையான முதுகலை வரலாறு மற்றும் முதுகலை பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் போன்ற படிப்புகள் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களும் இத்தேர்வுக்குத் தகுதியானவர்களே, என்ற அடிப்படையில் அவர்களும் தேர்வு எழுதியிருந்தனர்.
இந்நிலையில், ஓவரால் ரேங்கிலும், கம்யூனல் ரேங்கிலும் முதன்மையில் உள்ள முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் முதுகலைப் பட்டயம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படித்தவர்களுக்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு, ஓவரால் ரேங்க், கம்யூனல் ரேங்க் இரண்டிலும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை, பல்கலைக்கழகம் சார்பில், வரலாறு படித்தவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
உதாரணத்திற்கு எம்.பி.சி.க்குரிய நான்கு பணியிடங்களுக்கு தரவரிசைப் பட்டியல்படி 1, 3, 4, 5, 6, 10, 13, 24 ஆகிய 8 பேரை அழைத்துள்ளனர். 2, 7, 8, 9, 11, 12, 14 அழைக்கப்படவில்லை. இப்படி பி.சி, எஸ்.சி என அனைத்திலும் நடைபெற்றுள்ளது.
ஆனால், இதுநாள் வரை தமிழ் இலக்கியமும் முதுகலைப் பட்டயம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஆய்விற்கான படிப்பும் அடிப்படையாகக் கொண்டுதான் இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால் இந்நடைமுறை கைவிடப்பட்டு வழக்கத்திற்கு மாறான முறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு செயல்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வாணையம், தமிழ் படித்த மாணவர்களிடம் பி.எஸ்.டி.எம். சான்றிதழ் இணைக்கச் சொல்லியிருந்த நிலையில், அவர்கள் யாரும் இணைக்கவில்லை. அதனால், இப்படி அழைத்திருந்தோம் என்கிறார்கள்.
அதேபோல, தேர்ச்சி பெற்றவர்கள், மேலும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமது நிறுவனத்தில் பயின்ற மாணவர்களுக்கு, தமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமை அளிக்கும் பிஎஸ்.டி.எம். சான்றிதழ் வழங்காமல் இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
வருகின்ற 29ஆம் தேதி அன்று நேர்முகத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இவர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.