இஸ்லாமியர்களின் புனித திருநாளாக கருதப்படும் பக்ரீத் ஆகஸ்ட் 1 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி காங். சார்பாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும்.
பல்வேறு மதத்தினரும், தங்களின் தந்தை என போற்றும் ஆபிரகாம் எனும் இபுராஹிம் நபியும், அவருடைய துணைவியார் ஹாஜிரா அம்மையாரும், அவர்களுடைய புதல்வர் இஸ்மாயில் நபியும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்த தியாகங்களை செயலால் நினைவுகூறும் நன்னாளே இந்த தியாக திருநாள். உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்து கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளை போற்றி பாதுகாக்கிற வகையில், வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.