Skip to main content

சாதிவாரி கணக்கெடுப்பு;“தரவுகளைத் தமிழக அரசே திரட்ட வேண்டும்” - வேல்முருகன்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
TN govt should collect the data Velmurugan for Caste wise census

தமிழக சட்டப்பேரவையில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது.

எனவே 2021 ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டு அமர்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்ப்பினர்களான வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர். அந்த வகையில் சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில், “வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. மத்திய அரசுக்கு அனுப்பப்படும் தமிழ்நாடு அரசின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஆகையால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தரவுகளைத் தமிழ்நாடு அரசே திரட்ட வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்துவது தவறு. அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு தரமாட்டோம் என பாஜக உச்சநீதிமன்றத்திலோ அல்லது அவர்களோ கொள்கை முடிவு எடுத்தால் அதற்கான பழியை பாவத்தை பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிரியாக பாஜக அதனை எதிர்கொள்ளும். ஏன் திமுக அதனை எதிர்கொள்ள வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

சார்ந்த செய்திகள்