2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இவர் தாக்கல் செய்யும் 10 ஆவது பட்ஜெட் இதுவாகும். மேலும் 15 ஆவது சட்டப்பேரவையில் அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாளான இன்று (17/02/2020) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு பேரவையில் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏக்கள் சாவித்திரி அம்மாள், ராஜேந்திர பிரசாத், ராஜசேகரன் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, "தட்கல் திட்டம் காரணமாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு நிறுத்தவில்லை. ஆண்டுதோறும் 10 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. சாமானியன் மூலம் நல்லாட்சி தர முடியும் என்பதற்கு பழனிசாமியே சாட்சி" என்றார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், வேளாண் மண்டலம் பற்றி சட்டப்பேரவையில் ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்று பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "திமுக எம்பிக்கள் வேளாண் மண்டலத்தை ஏன் பெற்று தரவில்லை; 3- வது பெரிய கட்சி திமுக என்கிறீர்களே, செய்ய வேண்டியது தானே" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், "நாங்கள் மத்திய அரசிடம் எதிரும் புதிருமாய் உள்ளோம்; நீங்கள் தான் இணக்கமாய் உள்ளீர்கள்" என்றார். இதனிடையே வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம் என்ற பதாகையுடன் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு வந்தார். மேலும் சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் கவன ஈர்ப்பு மனுவை வழங்கினார்.