தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கிய நிலையில், அமைதியான முறையில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இன்று இரவு 07.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பிபிஇ (PPE) கிட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் துணை ராணுவப்படையினர், மாநில காவல்துறையினர் உட்பட 1.58 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று (06/04/2021) மாலை 05.00 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாகப் பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 50.05% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல், திருவள்ளூர்- 61.96%, சென்னை- 55.31%, காஞ்சிபுரம்- 62.96%, வேலூர்- 67.30%, கிருஷ்ணகிரி- 65.98%, தர்மபுரி- 68.35%, திருவண்ணாமலை- 68.04%, விழுப்புரம்- 68.97%, சேலம்- 66.98%, ஈரோடு- 65.93%, நீலகிரி- 61.48%, கோயம்புத்தூர்-59.25%, திண்டுக்கல்- 67.32%, கரூர்- 69.21%, திருச்சி- 64.65%, பெரம்பலூர்- 68.36%, கடலூர்- 65.75%, நாகப்பட்டினம்- 61.37%, திருவாரூர்- 66.54%, தஞ்சாவூர்- 65.72%, புதுக்கோட்டை 68.48%, சிவகங்கை- 63.11%, மதுரை- 60.96%, தேனி- 64.95%, விருதுநகர்- 67.08%, ராமநாதபுரம்- 61.67%, தூத்துக்குடி- 62.77%, கன்னியாகுமரி- 62.27%, அரியலூர்- 67.13%, திருப்பூர்- 62.15%, கள்ளக்குறிச்சி- 69.60%, தென்காசி- 63.33%, செங்கல்பட்டு- 53.39%, திருப்பத்தூர்- 67.45%, ராணிப்பேட்டை- 67.82% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்படுகிறது.