தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை, நாளை (19/12/2020) தொடங்க உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு இன்னும் அதை எடுத்துக்கொள்ளவில்லை. மத்திய அரசின் அதிகாரிகள் இன்னும் கையெழுத்திட்டு, நிலத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. குறிப்பிட்ட நிறுவனங்களிடம் தான், ஜி.பி.எஸ் வாங்க வேண்டும் என நிர்பந்தம் செய்யவில்லை. மின்துறையை, தனியார் மயமாக்கும் எந்த எண்ணமும் அரசிடம் இல்லை. கேஸ் விலையைக் குறைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும். சேலம் எடப்பாடி தொகுதியில் இருந்து, நாளை (19/12/2020) சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்க உள்ளேன். நாட்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ளேன். அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பரப்புரையைத் தொடங்குகிறேன். அ.தி.மு.க.வை பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் தான் பா.ஜ.க. உள்ளது" என்றார்.
நாளை (19/12/2020) முதல் அரசியல் கூட்டங்களைத் திறந்தவெளியில் நடத்தலாம் எனத் தமிழக அரசு தளர்வு அறிவித்த நிலையில், முதல்வர் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.