தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (09/09/2021) சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "நெல்லை நகரில் நவீன வசதிகளுடன் ரூபாய் 15 கோடி மதிப்பில் 'பொருநை' தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும். ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை பகுதிகள் அடங்கிய 'பொருநை' ஆற்றங்கரை நாகரிகம் குறித்து ஆய்வு செய்யப்படும். 'பொருநை' ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிகல் ஆய்வு மையத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
சிவகளையில் கண்டெடுத்த நெல்மணிகள் அமெரிக்க ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் கிடைத்துள்ளன. கேரளாவின் பட்டணம், ஆந்திராவின் வேங்கி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதேபோல், கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிஷாவின் பாலூர் போன்ற வரலாற்று சிறப்புடைய இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செல்வோம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆறுதான் இலக்கியங்களில் 'பொருநை' என குறிப்பிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.