திண்டுக்கல் ஜுவல்லரி கடை உரிமையாளர் சீனிவாசன் இல்ல திருமண வரவேற்பு விழா நேற்று (19.12.2021) நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜி.கே. வாசன், “பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் பெரும்பாலான நேரங்களில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கும் விதமாக தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பிவருகின்றனர். இது நாட்டின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். கரோனா தொற்று குறைந்து பொதுமக்களின் பொருளாதாரம் சற்று உயர்ந்துவரக்கூடிய இந்தச் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் மசோதா குறித்து விவாதங்கள் நடத்தவிடாமல், அதில் கலந்துகொள்ளாமல் அவையை முடக்குவது என்பது ஏற்கத்தக்கதல்ல. அவையைத் தொடர்ந்து நடத்தி மசோதாக்கள் நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும். நாட்டின் வளர்ச்சி கருதி மத்திய அரசு கொண்டுவருகின்ற மசோதாக்கள் நிறைவேற அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
டிச. 17ஆம் தேதி தனியார் பள்ளி கட்டட சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் தொந்தரவு என்பது உலகத்தில் இருக்கக் கூடாது; இந்தியாவில் இருக்கக் கூடாது, ஏன் தமிழகத்தில் இருக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தனிமனித ஒழுக்கம் தேவை. ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை உறுதி செய்ய வேண்டும். அதையும் தாண்டி அவ்வாறு தவறு செய்பவர்களைத் தூக்கில் போட வேண்டும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக நிறைய வாக்குறுதிகள் கொடுத்துள்ளது. தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதனைப் படிப்படியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.