கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 1ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் காலை மற்றும் இரவில் வலம் வரும் உற்சவ மூர்த்திகளை தரிசனம் கண்டு வருகின்றனர். 10ந்தேதி காலை பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். தீபத்தன்று கிரிவலம் வரவும், மலையேறி அண்ணாமலையார் பாதத்தை காணவும் தமிழகம் உள்பட பல பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோயிலுக்குள் இருந்து தீபதரிசனத்தை காண பொது மக்களுக்கு கட்டண தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பரணி தீபத்துக்கு 500 ரூபாய் கட்டணத்தில் 1000 டிக்கெட்டுகளும், 600 ரூபாய் கட்டணத்தில் 100 டிக்கெட்டுகளும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த டிக்கெட் விற்பனை கடந்தாண்டுக்கு முந்தைய ஆண்டு 2 நிமிடத்தில் விற்று தீர்ந்ததாக கோயில் நிர்வாகம் அறிவித்து டிக்கெட் கவுண்டர்களை மூடியது. இது பெரும் பிரச்சையானதால் இந்தாண்டு முதல் ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஆன்லைன் விற்பனையை டிசம்பர் 7ந்தேதி தொடங்கி வைத்தார்.
http://www.arunachaleswarartemple.tnhrce.in/ என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து, அதன்வழியாகவே பணத்தை கட்டி டிக்கட்டை டவுன்லோட் செய்துக்கொண்டு தீபத்தன்று அதில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு அம்மனியம்மன் கோபுரம் வழியாக வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.