திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, போளுர், வந்தவாசி, செய்யார் போன்ற நகரங்களிலும், செங்கம், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், கண்ணமங்களம் போன்ற சிற்றூராட்சிகளிலும், குக்கிராமங்களிலும் தங்கு தடையின்றி போதை பாக்குகள், குட்கா போன்ற போதை வாஸ்த்துகள் சரளமாக கிடைக்கின்றன.
இதுப்பற்றி பொதுமக்கள் தரப்பில் இருந்து காவல்துறைக்கு தகவல் சென்றன. காவல்துறையில் திருவண்ணாமலை மாவட்ட ஏ.டி.எஸ்.பி அசோக்குமார், டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையில் செயல்பட்ட டெல்டா டீம் வசம், சப்ளையர் யார் என கண்டறிய உத்தரவிடப்பட்டது.
அதன்படி, போலிஸ் ரகசியமாக கண்காணிப்பை தீவிரப்படுத்தி, விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வியாபாரம் செய்வது திருவண்ணாமலை நகரம், வேட்டவலம் சாலையில் உள்ள பண்டாரம் குட்டை தெருவை சேர்ந்த முருகேசன் மகன் முரளி என்பதை கண்டறிந்தனர்.
32 வயதான முரளி, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்பான கேட்பரீஸ் சாக்லேட், டாபர் பேஸ்ட், கோபிகா சாக்லேட் இந்த மூன்றிற்கும் கடந்த நான்கரை ஆண்டுகளாக திருவண்ணாமலை நகரில் ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார். இந்த பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு செல்லும்போது, அவைகளுக்கு நடுவில் வைத்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு சென்று கடைகளுக்கு சப்ளை செய்து கொண்டிருக்கிறார் என்பதை கண்டறிந்தனர்.
நவம்பர் 4ந்தேதி காலை 9.30 மணி அளவில் முரளி வீட்டில் ரெய்டு செய்தனர். ரெய்டில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். முரளியை கைது செய்யும்போது அவருடன் இருந்த வாகன ஓட்டுநர் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். சுரேஷ்சின் சொந்த ஊர் பெங்களுரூ அருகிலுள்ள அத்திப்பள்ளி என்பதால் அங்கு தனிப்படை ஒன்று சென்றுள்ளது.
இந்த குட்கா பொருட்கள் அத்திபள்ளியிலிருந்து திருவண்ணாமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. முரளி இதே போன்று தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என தெரியவந்துள்ளது. அதுப்பற்றிய தகவல்களையும் டெல்டா டீம் ஆராய்ந்து வருகிறது.
முரளி வீட்டில் இருந்து ஹான்ஸ் 16 பெட்டி, விமல் பாக்கு 10 பெட்டி, ஃபில்டர் ஆன்ஸ் 6 பெட்டி, மிக்ஸிங் 16 சிப்பம், இரண்டு கார் மற்றும் ஒரு வேன் பிடித்துள்ளனர். முரளி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். முரளிக்கு சப்ளை செய்வது யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.