திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தற்போதைய நிலவரம் குறித்து வடக்கு மண்டல போலீஸ் ஐஜி கண்ணன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நான்கு ஏடிஎம்களின் சிசிடிவி காட்சிகள் மும்பையிலிருந்து வாங்கப்பட்டது. அவை தற்போது பரிசீலனையில் உள்ளது. நான்கு ஏடிஎம் மிஷின்களும் கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் கட் செய்யப்பட்டதால் தீப்பிடித்திருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை. அதனால் இச்சம்பவம் டெக்னிக் தெரிந்த வெளிமாநில கொள்ளையர்களால் தான் நடத்தப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, அசாம் போன்ற மாநிலங்களில் இது போல் நடந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுதான் முதல் முறை. இதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தவிர வெளி மாநிலங்களில் விசாரணைக்கு சென்றுள்ளனர். திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தான் சென்னையில் நகைக்கடையில் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சென்னை நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பலும் திருவண்ணாமலையில் ஏடிஎம்மில் கொள்ளை அடித்த கும்பலும் ஒரே இடத்திலிருந்து ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் வெவ்வேறு ஆட்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் நடந்த கொள்ளைகளையும் ஒரே கும்பல் தான் செய்துள்ளது. அவற்றை மொத்தமாக இரண்டு மணி நேரத்தில் செய்து முடித்துள்ளார்கள்" என்றார்.