திருவள்ளூவர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கரன் என்பவரின் மகள் அதிகைமுத்தரசி. அதே பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியின் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருந்ததால் மாணவி அதிகைமுத்தரசி மாவட்ட கல்வி அலுவலரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்தார். அதில் தான் படிக்கும் பள்ளி கட்டிடம் மிகவும் மோசமானதாக பழுதடைந்துள்ளதால் அக்கட்டிடத்தை பழுது பார்த்து சீர் படுத்த வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும், அப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அதை மீட்டு பள்ளிக்கு விளையாட்டுத்திடல் ஏற்படுத்தி தரவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அந்த மாணவி பள்ளியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார். எனவே அந்த மாணவி நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருவள்ளுர் மாவட்ட நீதிபதியை நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்திரவிட்டது. இதையடுத்து விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 2ஆம் தேதி இன்று வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதில் நீதிபதிகள் சுந்தரேசன், கிருஷ்ணராமமூர்த்தி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், புகார் மனுவில் மனுதாரர் அதிகைமுத்தரசி குறிப்பிட்டிருந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்திருந்ததை சீர்படுத்த வேண்டும் மற்றும் பள்ளி வளாகத்தின் அருகே இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளி விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும். இதை ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்திரவிட்டனர். மேலும் இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் மனுதாரர் இதே மனுவில் வழக்கை தொடரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.