திருப்பூர் மாவட்டத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததால் காவலர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஜெகநாதன். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மோசடி வழக்கு ஒன்று அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த வாசு குமார் என்பவருக்கு ஜெகநாதன் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக புகார் எழுந்திருந்தது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளம்பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அவரின் கொலை மிரட்டலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெகநாதன் மீது புகார் அளித்தார். இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜெகநாதன் தனது பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமை காவலர் ஜெகநாதனை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.