"வேளாண்துறை அமைச்சரின் இறப்பு வேதனைக்குறிய செய்தி, இதில் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வது என்பது மோசமான செயல்" என அமைச்சர் காமராஜ் திருவாரூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் தமிழக அரசு சார்பில் 1,245 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் துவக்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர், “மாவட்டம் முழுவதும் 1,245 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். ஏற்கனவே வழங்கியதைவிட கூடுதலாக 5 லட்சம் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்கிற முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறோம்.
வேளாண்துறை அமைச்சர் இறந்த செய்தி வேதனையளிக்கிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வது என்பது மோசமான செயல். அதை தவிர்த்திருக்கவேண்டும் மக்கள் அவரை ஏற்று கொள்ளமாட்டார்கள். வேளாண்துறையின் அமைச்சர் துரைகண்ணுவின் ஆதரவாளர்களை கைது செய்யவில்லை. மாறாக கும்பகோணத்தில் சட்ட விரோத செயலில் ஈடுபட்டவர்களையும், ஈடுபடுபவர்களையும் மட்டுமே காவல்துறையினர் கைது செய்து வருகிறோம் என மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்." என்றார்.
மேலும் ‘பாஜக மாநில தலைவர் முருகன் நாங்கள் யாரை கை காட்டுகிறோமோ அவர்தான் தமிழகத்தின் முதல்வர்’ என்று கூறியது குறித்தான கேள்விக்கு “ஜெயலலிதா ஆட்சியை மக்கள் ஏற்று கொண்டுள்ளார்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்றியது அதிமுக ஆட்சி. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கும் முருகனுக்கும் தொடர்பே இல்லையா என கேட்க, பதில்கூறாமலேயே கிளம்பிவிட்டார்.