தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் பெரிய கட்சியாக இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதிகளை ஒதுக்குவதில் ஆரம்பம் முதலே கடும் இழுபறி நீடித்து வந்தது. முதலில் எத்தனை தொகுதிகள் என்பதில் நீடித்த இழுபறி, ஒரு கட்டத்தில் 25 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டதுடன் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்தது.
அதையடுத்து, அக்கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்த பல தொகுதிகள் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக இருந்ததால், அத்தொகுதிகளை ஒதுக்குவதிலும் இரு கட்சிகளிடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒருவழியாக, வியாழக்கிழமை (மார்ச் 11) மாலையில் இரு தரப்பிலும் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளுள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் தொகுதியும் ஒன்று.
இந்த தொகுதியில், கடந்த 1971 முதல் 2016 வரை நடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் 7 முறை அதிமுகவும், திமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.
கடந்த 1984ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அன்பழகன் வெற்றிபெற்றார். அப்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது காங்கிரஸ். அதன்பிறகு 1996இல் நடந்த தேர்தலின்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, ஜி.கே.மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது. அப்போது நடந்த தேர்தலில் ஓமலூர் தொகுதியில் திமுக கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் ஆர்.ஆர்.சேகரன் வெற்றிபெற்றார். என்றாலும், ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு நேரடியாக ஓமலூர் தொகுதியில் போட்டியிடவில்லை.
வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள ஓமலூர் தொகுதியில் போட்டியிட திமுக பெரிதும் ஆர்வம் காட்டியது. எனினும், அடித்துப் பிடித்து இந்த தொகுதியைக் கைப்பற்றி இருக்கிறது காங்கிரஸ். 1984க்குப் பிறகு அதாவது, கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஓமலூரில் காங்கிரஸ் களம் காண்கிறது. இத்தொகுதியில் அதிமுகவுடன், காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது.
திமுக சார்பில் இளைஞரணி அருண் பிரசன்னா, சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் குபேந்திரன், தளபதி நற்பணி மன்ற நிர்வாகி மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ தமிழரசு உட்பட பலரும் சீட் கேட்டிருந்தனர். எல்லோருமே 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யவும் தயாராக இருந்தனர். இந்நிலையில், ஓமலூர் தொகுதி திமுகவின் கையை விட்டு 'கை'க்குப் போனதில் ரொம்பவும் அப்செட் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 12) அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அனேகமாக, ஓமலூர் தொகுதியில் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.