திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள தனியார் விவசாய கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பத்மநாபன் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை சென்றுவிட்டு ரயில் மூலமாக ஆம்பூருக்கு வந்துள்ளார். ரயிலில் இருந்து இறங்கி தன்னை அழைத்துச் செல்ல இருசக்கர வாகனத்தை எடுத்து வரச் சொல்லி தனது குடும்ப உறவினர் ஒருவருக்கு போன் செய்துவிட்டு நடைமேடையில் அமர்ந்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவர் செல்போனை கையில் வைத்துக்கொண்டு வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டு இருந்தபோது, திடீரென பின்னால் இருந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். திருடன் திருடன் என கத்திக்கொண்டு அவர்களைப் பிடிக்க முயன்றும் முடியவில்லை. இது தொடர்பாக அவர் ரயில்வே போலீஸில் புகார் தந்துள்ளார்.
அதேபோல் ஆம்பூர் அடுத்த அய்யனூர் மேம்பாலம் அருகே ஆம்பூரில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆசிரியர் கனகராஜ், செல்போனில் பேசியவாறு வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் பின்னால் இருந்து மின்னல் வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதற்கு முன்பு அந்தப் பகுதியில் ஏற்கனவே ஒரு ஆசிரியரின் செல்போனை பறித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரே வாரத்தில் 3 செல்போன்கள் பொது மக்களிடமிருந்து பறித்துச் சென்றது ஆம்பூர் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் செல்போனை வெளியே எடுத்துப் பேசினாலும் இருக்கமாக பிடித்துக்கொண்டு பேசுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.