திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 8 பேர் டெல்லி சென்று வந்ததையடுத்து, அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் இருவருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் இருவரும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற 6 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து தீவரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த 8 பேரின் குடும்பத்தை சேர்ந்த 52 பேரில் ஆண்கள் தனியார் மகளிர் கல்லூரியிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியார் மண்டபத்திலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் தனிமைபடுத்தப்பட்ட 52 பேருக்கு ரத்த பரிசோதனையில், கரோனா நோய் தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் சுகாதார துறையின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் நிலோபர் கபீல் நேரில் சென்று அவர்களுக்கு ரோஜா பூ வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மேலும் வீட்டிலும் தனிமைப்பட்டு இருக்க அவர்களுக்கு மருத்துவர் பசுபதி அறிவுரை வழங்கினார். சிறப்பு பேருந்து மூலம் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.