வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை என்கிற இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. பிறந்த குழந்தையாக இந்த மாவட்டங்கள் இருக்கும் நிலையிலேயே கரோனா பிரச்சனை தொடங்கியது. இதனால் இந்த இரண்டு மாவட்டங்களில் துறைகள் உருவாக்கம், அதிகாரிகள் நியமனம், அடிப்படை கட்டுமானங்கள் உட்பட பலவும் தடையாகின.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் கண்டறியும்போது, அவர்களை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கே அனுப்பிவைத்தனர். அதன்பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை உட்பட இரண்டு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளித்துவந்தனர். அதேபோல் கரோனா பரிசோதனைக்கான ஆய்வு மையம் வேலூர் மருத்துவக்கல்லூரியில் மட்டும் இருந்ததால் திருப்பத்தூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கரோனாவுக்கான மாதிரிகள் வேலூர், தருமபுரி, சென்னை என அனுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில் எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் நிதி ஒதுக்கியதன் அடிப்படையில் அரசாங்கம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை ஆய்வகம் அமைக்க உத்தரவிட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சியால் உடனடியாக 1.5 கோடி ரூபாய் மதிப்பில் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இந்தப் பரிசோதனை மையத்தை ஜீன் 19ஆம் தேதி அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், எஸ்.பி மருத்துவர் விஜயகுமார், எம்.எல்.ஏக்கள் திருப்பத்தூர் நல்லதம்பி, ஆம்பூர் வில்வநாதன் கலந்துகொண்டு திறந்துவைத்தனர்.
இந்த மையம் தமிழகத்தில் கரோனா பரிசோதனை செய்யும் 60ஆவது மையமாகும். ஏற்கனவே அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை என 43 பரிசோதனை மையங்களும், தனியாரில் 16 மையங்களும் உள்ளன. இனி திருப்பத்தூர் மாவட்ட மக்கள் எல்லாவிதமான பரிசோதனைகளையும் இங்கேயே செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை விட மருத்துவர்களை நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது. காரணம், கரோனா உட்பட பலவிதமான பரிசோதனைகளின் மாதிரி வேலூர், தருமபுரி, சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டுக்கு அனுப்பிவைத்துக்கொண்டு இருந்தோம். இதனால் முடிவுகள் வர தாமதமானது. இந்தக் கரோனா காலத்தில் உடனுக்குடன் முடிவுகள் தேவைப்பட்டது. ஆனால் 2 முதல் 3 நாட்களுக்கு பின்பே முடிவுகள் வந்தது. இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இனி அப்படி நடக்கவாய்ப்பில்லை என்றார்கள்.
இந்த ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை செய்ய 8 மணி நேரத்துக்கு 10 பேர் என்கிற கணக்கில் 30 பேர் பணியாற்றவுள்ளார்கள். இதற்கான பணியாளர் தேர்வு இந்த வாரம் நடைபெற்று உடனடியாக அவர்கள் பணியில் சேர்த்துப் பரிசோதனை முடிவுகளை வெளியிட முடிவு செய்துள்ளனர் மருத்துவத்துறையினர்.