பாளையை அடுத்துள்ள சீவலப்பேரி சமீபமிருக்கும் பாலாமடை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (29). இவரது மனைவி பிச்சம்மாள். இந்த தம்பதிகளுக்கு பழனி என்ற மகன் உள்ளார். வாலிபரான முருகானந்தம் கிராமத்தில் விவசாய கூலி வேலையிலிருப்பவர். இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் தன் மகன் பழனியை முன்புறம் அமர வைத்தவாறு பாளையங்கோட்டைக்கு வந்திருக்கிறார் முருகானந்தம். காலை 11.30 மணியளவில் அவர்கள் மொபட்டில் சமாதானபுரத்தின் கண்ட்ரோல் ரூம் அருகேயுள்ள எருமைக்கிடா மைதானருகே வரும் சமயம் ஒரு திருப்பத்தில் முருகானந்தத்தின் மொபட் மெதுவாகத் திரும்பிய நேரத்தில் திடீரென்று எதிரே இரண்டு டூவீலர்களில் வந்த மர்மநபர்கள், முருகானந்தத்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். அதில் முருகானந்தம் உட்பட மூவரும் நிலை குலைந்து சரிந்திருக்கின்றனர்.
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் முருகானந்தத்தின் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளனர். அடுத்தடுத்து தலையில் வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே முருகானந்தம் பிணமானார். தன் கண் முன்னே கணவர் வெட்டப்பட்டது கண்டு மனைவி கதறிய நேரத்தில், படுகொலைச் சம்பவத்தால் அக்கம்பக்கத்தினர் பதறிய ஒடியிருக்கின்றனர். முருகானந்தத்தை வெட்டிய போது அவரது மகன் பழனிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த பாளை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் முருகானந்தத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி விட்டு விசாராணையை மேற்கொண்டுள்ளனர்.
பல் தொந்தரவு காரணமாக சிகிச்சைக்காக பல் மருத்துமனைக்கு வந்து கொண்டிருந்த போது தான் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாராணையில் தெரிவித்திருக்கிறார் மனைவி பிச்சம்மாள்.
பலியான முருகானந்தத்தின் மீது நான்கு கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் இரண்டு கொலை வழக்குகள். வழக்கின் வாய்தாவிற்காகத் தவறாமல் ஆஜராகி வந்திருக்கிறார். இன்று வழக்கின் பொருட்டு நீதிமன்றம் சென்றுவிட்டு மனைவி, மகனுடன் மருத்துவமனைக்குச் செல்லும் போது தான் மர்ம நபர்களால் முருகானந்தம் படுகொலைக்குள்ளாகியிருக்கிறார்.
மேலும் கடந்த 2018 சீவலப்பேரில் நடந்த படுகொலையில் தொடர்பாகப் பழிக்குப் பழியாக நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது என்கிறார்கள் போலீஸ் விசாராணை அதிகாரிகள்.
ஜனரஞ்சகமான பாளையில் பட்டப்பகலில் நடந்த படுகொலைச் சம்பவத்தால் அதிர்ந்திருக்கிறது பாளை.