முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பல்வேறு பரபரப்புகளுக்கிடையே நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்ய வந்த சி.பி.ஐ. அதிகாரிகளை வீட்டுக்குள் விடவில்லை என்று சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று கைது செய்து அழைத்துச் சென்றனர். இது ஒட்டுமொத்த காங்கிரஸ்காரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ப.சிதம்பரம் கைது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். இந்தநிலையில்தான் புதுக்கோட்டையில் மத்திய அரசு அலுவலகமான தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் மாவட்டத் தலைவர் புஸ்பராஜ், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசையும், சி.பி.ஐ. இயக்குநர், மற்றும் தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து சி.பி.ஐ. இயக்குநர் மற்றும் அமைச்சர் ராசேந்திரபாலாஜி படங்களை எடுத்து அவமரியாதை செய்து எரிக்க முயன்றபோது பொலிசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.