
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 20 ஆம் தேதி (20.05.2024) மதியம் 02:00 மணியளவில் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சி ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் பரபரப்பு காட்சிகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் தீபக் ராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான வாகைகுளத்தில் இன்று (27.05.2024) அடக்கம் செய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்திற்கு பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் சுமார் 2 ஆயிரம் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலத்தின் போது மட்டும் சுமார் 500 போலீசார் உடன் சென்றனர். தீபக் ராஜாவின் உடலுடன் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் புத்தகங்கள் வைத்து அடக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.