Skip to main content

பக்கப்பட்டி இரட்டைக்கொலையில் கூலிப்படைத் தலைவன் கைது..!

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

tt

 

பக்கப்பட்டி கிராமத்தினை சேர்ந்த தாத்தாவும், பேரனும் கடந்த வாரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். சமூகப் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலையை  செய்த பிரபல கூலிப்படைத்தலைவன் குமுளி ராஜ்குமார், கண்ணபிரான், எஸ்டேட்மணி மற்றும் 11 நபர்களை இனம் கண்டு கைது செய்து நெஞ்சை நிமிர்த்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை.

 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ள பக்கப்பட்டி கிராமத்தினை சேர்ந்த ஐஸ் வியாபாரியான முத்துசாமி. இவரது மகன் ராமையா. ராமையாவின் மகன் சுடலைமணி நெல்லையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸில் விற்பனையாளராக வேலைப் பார்த்து வந்தார். இக்குடும்பத்தினருக்கும் உள்ளூரிலுள்ள வேறொரு சமூகத்தினை சேர்ந்த குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 26-ம் தேதியன்று நெல்லையிலிருந்து பணி முடித்துவிட்டு முறப்பநாடு திரும்பும்போது, தாத்தா முத்துசாமியை பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கக் கூறியுள்ளார் சுடலைமணி. இந்நிலையில், முறப்பநாட்டில் காத்திருந்த வேறொரு கும்பல், பேருந்தை விட்டு இறங்கிய சுடலை மணியையும், காத்திருந்த முத்துசாமியையும் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எஸ்.பி.முரளி ரம்பா, ஏ.டி.எஸ்.பி.பொன்ராம், டி.எஸ்.பி.முத்தமிழ் உள்ளிட்ட காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இரட்டைப் படுகொலையின் கொலையாளிகளை பிடிக்க, மாவட்ட எஸ்.பி.யால் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வந்த வேளையில், நெல்லையை சேர்ந்த கூலிப்படைத் தலைவன் குமுளி ராஜ்குமார், கண்ணபிரான், எஸ்டேட் மணி உட்பட 14 நபர்களை அதிகாலை 3-மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 9 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள் உட்பட 21-அரிவாள்களை பறிமுதல் செய்து பெருமைப்பட வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் மிகுந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்