திமுக அமைச்சர்களிடம் பணம் பெற்றுத்தான் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தினார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ''விசிக தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறேன் அதில் எல்லா கட்சிகளும் வரலாம் அதிமுகவும் வரலாம் என்று சொன்னார். அவர் சொன்ன ஒரே வார்த்தைதான். அப்பொழுது அமெரிக்காவில் இருந்த ஸ்டாலின் வந்த உடனே அவரை கூட்டிக்கொண்டு வர சொல்லுகிறார். 'என்னங்க திருமாவளவன் எங்க கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக எடப்பாடியை மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று சொல்லுகிறீர்களே. அது அரசாங்கத்தை எதிர்ப்பதாக ஆகாதா. இப்படி நீங்கள் ஒரு தீர்மானம் போடும்? அந்த மாநாட்டை நடத்தலாமா? அதற்கு எடப்பாடியை கூப்பிடலாமா' என்று கேட்கிறார். இல்லைங்க அதை உங்களுக்கு ஆதரவாக தான் செய்கிறேன் என்று பேசி முடித்த பிறகு, மாநாடு நடத்துங்கள் அந்த மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும் இளங்கோவனும் அதில் கலந்துகொண்டு வாழ்த்துவார்கள். அரசாங்கத்திற்கு எதிராக எந்த தீர்மானமும் போட வேண்டாம், மத்திய அரசுக்கு எதிராக எல்லா தீர்மானமும் போடுங்கள்' என்று முதல்வர் கூறியுள்ளார்.
அத்தனை செலவுகளையும் அமைச்சர்கள் பங்கெடுக்க சொல்லி திமுக போட்ட மைதானம், திமுக போட்ட மேடை, திமுக போட்ட சேர்கள் என திமுக செய்த செலவில் விசிக தோழர்களை உட்கார வைத்த பெருமை திருமாவளவனுக்கு சேரும். ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பார் என்று சொல்வார்கள். திருமாவளவன் அதிமுகவை அழைத்த ஒரே வார்த்தைக்காக பல கோடி ரூபாயை அங்கே ஆதாயமாக ஸ்டாலினிடம் அமைச்சர்கள் மூலமாக பெற்று அந்த மாநாட்டை நடத்தி ஒரு நாடகம் காண்பிக்கிறார்கள். ஏன் இதை செல்கிறேன் என்று சொன்னால் அதிமுக கூட்டணிக்கு விசிக கட்சி போகப் போகிறது என்று பத்திரிகைகளில் எழுதியது உண்மை. அது என்ன விளைவு வரும் என்று திருமாவளவனுக்கு வரும் தெரிந்துதான் அந்த ஆயுதத்தை எடுத்து போடுகிறார். அது அவருக்கு வெற்றியை கொடுத்துவிட்டது. பணம் மூலம் அவருக்கு வரவு வந்துவிட்டது. அந்த மாநாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு இருக்கிறார்களா என்றால் கிடையாது. மத்திய அரசு இந்தியா முழுவதும் மதுவை ஒழிப்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் அந்த சட்டத்தை நிறைவேற்ற முடியும் எனவே மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று திருமாவளவன் சொல்லுகிறார். 'கேப்பையில் நெய் வருகிறது என்றால் கேட்பவனுக்கு எங்கே போனது புத்தி' என்று கிராமத்தில் கேட்பார்கள். அந்த மாதிரி எல்லோர் காதிலும் பூசுற்றுகின்ற நிகழ்ச்சியை திருமாவளவன் செய்து காண்பித்தார்'' என்றார்.
Published on 09/10/2024 | Edited on 09/10/2024