திருச்சி காந்தி சந்தையை இடம் மாற்றம் செய்ய, திருச்சி மணிகண்டம் அடுத்த கள்ளிக்குடியில் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது. வியாபாரிகள் அங்குச் சென்று வியாபாரம் செய்ய முன்வரவில்லை. அந்தக் கட்டிடம் 75 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனோ சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் 19.03.20 அன்று துபாய், சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து, 2 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், டைகர் ஆகிய 3 விமானங்களில், திருச்சி விமான நிலையத்திற்கு 431 பயணிகள் வந்து இறங்கினர். இவர்களில் 27 பயணிகளைச் சந்தேகத்தின் அடிப்படையில் கள்ளிக்குடி கட்டிடத்தில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
நேற்று (20.03.20) திருச்சி வந்த 26 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாகக் கூறி, திருச்சி கள்ளிக்குடி சிறப்பு சுகாதார வளாகத்தில் மருத்துவ கண்காணிப்பில் வைக்க அழைத்துச்சென்றனர்.
அதனைத் தொடர்ந்து இன்று திருச்சி வந்த 34 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாகக் கூறி, திருச்சி கள்ளிக்குடி சிறப்பு சுகாதார வளாகத்தில் மருத்துவ கண்காணிப்பில் வைக்க அழைத்துச்சென்றனர்.
இன்று திருச்சி பத்திரிகையாளர்களிடம் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு பேசுகையில், 22.03.2020 சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சியில் கூட்டமாக யாரும் கூடினால் காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 34 பேர் கள்ளிக்குடி கண்காணிப்பு மையத்தில் வைத்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என கண்காணிக்கப் படுகிறார்கள். நான்கு பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் உள்ளதாகவும் தெரிவித்தார். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பொதுமக்களைப் பீதியடைய செய்யும் வகையில் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.