தமிழ்நாடு முதலமைச்சரின் புதுமைப்பெண் இரண்டாம் கட்ட திட்டத்தை திருவள்ளூரில் இருந்து காணொலி காட்சியின் வாயிலாக தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒருபகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 பெறுவதற்கு வங்கி பற்று அட்டைகள் (Debit card) 1730 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். மேலும், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் நித்தியா உள்ளிட்ட அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், “1730 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. மராமத்து பணிகள் நடைபெற்று வரும் காவிரி பாலம் இன்னும் 15 நாட்களுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். பருவம் தவறிய மழையால் திருச்சி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் 81 ஏக்கர் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாகக் கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மாணவி அபிநயா, “ஒரு வருடம் பணம் இல்லாததால் கல்லூரிக்கு செல்லவில்லை. இந்த புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் என்னுடைய குடும்பத்திற்கு மிக உதவியாக இருக்கும். நான் கல்லூரி படிப்பை படித்து முடிக்கும் வரை இந்த மாதம் ஆயிரம் ரூபாய் என்பது கிடைக்கும் என நம்புகிறேன். எனவே முதல்வருக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் செமஸ்டர் தேர்விற்கு என்னுடைய தந்தையின் மோதிரத்தை அடகு வைத்து நான் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இனி அப்படிப்பட்ட நிலை ஏற்படாது. இந்த ஆயிரம் ரூபாய் என்னுடைய படிப்புக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார்.