கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கோட்லாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி(50), இவரது மனைவி சத்தியவதி(48). இவர்களது மகள் ஷாஷினியை (28 பெயர் மாற்றப்பட்டுள்ளது) சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கணவனைப் பிரிந்த ஷாஷினி, தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். குழந்தைகளைத் தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுள்ளார் ஷாஷினி. அங்கே வேலை பார்த்து வந்தபோது அதே பகுதியில் வேலை பார்த்து வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த வெற்றி என்பவருடன் அவருக்கு அறிமுகமாகியுள்ளது. பிறகு அவர்களுக்குள் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதையடுத்து வெற்றியும் ஷாஷினியும் தனி வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷாஷினி அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். ஆனால், ஷாஷினி எங்கே சென்றார் என அறியாத வெற்றி, பல இடங்களில் அவரைத் தேடி பிறகு கடைசியாக ஷாஷினியின் பெற்றோரை தேடி வந்துள்ளார்.
அவர்களிடம் ஷாஷினி குறித்து வெற்றி விசாரித்தபோது, யாரென்றே தெரியாத நீ ஏன் என் பெண்ணை பற்றி விசாரிக்கிறாய் என ஷாஷினியின் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயம், வெற்றி தன்னிடம் இருந்த கத்தியால், சுப்பிரமணியின் வயிற்றில் குத்தியுள்ளார். அதனை அவரது மனைவி சத்தியவதி தடுக்க வந்தபோது அவரது வயிற்றிலும் வெற்றி குத்தியுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்டதும் வலியில் அவர்கள் கத்தியுள்ளனர். அந்தச் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கே வந்துள்ளனர். அதனைக் கண்டு வெற்றி அங்கிருந்து தப்பியுள்ளார். அங்கே வந்தவர்கள் சுப்பிரமணி மற்றும் சத்தியவதியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.