2023 - 2024ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதனை வரவேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்படுகிறது. சூதாட்டத் தடை சட்டத்தை தமிழக அரசு மீண்டும் தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்!
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 2021-ஆம் ஆண்டு சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் புதிய சட்டம் மிகவும் தேவை ஆகும்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தின் தேவையை ஆளுநர் உணர வேண்டும். இந்த சட்டத்திற்கு இப்போது ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியது அரசியலமைப்பு சட்டத்தின்படி கட்டாயம் என்பதால் அதை அவர் உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டமுன்வரைவு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்படவிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. சட்டமுன்வரைவு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அதை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
பா.ம.கவின் வலியுறுத்தலை ஏற்று சட்ட முன்வரைவை அரசு மீண்டும் தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சட்ட முன்வரைவுக்கு தமிழக ஆளுநர் தாமதிக்காமல் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.