அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் சென்னை வேளச்சேரியில் ஒரு ஷாப்பிங் மால் கடையில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
கடந்த 20ம் தேதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று சேர்ந்துள்ளார். இவரை பரிசோதித்த டாக்டர்கள் சந்தேகத்தின் பேரில் அவரை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் மேலும் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக இவரது மருத்துவ அறிக்கை சென்னை கிங் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வந்த பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதிசெய்தனர். இதை நேற்று அரியலூர் மருத்துவமனை டாக்டர்கள் அறிவித்தனர்.
அவரை தனிமைப்படுத்தும் வார்டில் தங்க வைத்து தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளர்களாக வேலை செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் இரண்டு பெண்கள் ஒரு ஆண்.
தனிமையில் சிகிச்சையில் இருந்த அந்த இளம்பெண் தனது செல்போனில் டிக்டாக் எடுத்து ஜாலியாக அதை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதை கவனித்த மேற்படி மூன்று ஊழியர்களும் அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை வாங்கி டிக் டாக் பார்த்துள்ளனர். இதை தற்செயலாக பார்த்த மருத்துவர்கள் அந்த மூன்று பேர்களையும் கடுமையாக எச்சரித்ததோடு கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் பயன்படுத்தியதால் மேற்படி மூவரையும் தனிமை படுத்தி தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவர்களுக்கும் கொரான பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ பணியாளர்கள் கொரோனா பாதித்த நபர்களிடம் மிகவும் எச்சரிக்கை யாகப் பழகவேண்டும். மருந்து மாத்திரைகள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் கூட, அதை அலட்சியம் செய்து விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். மேற்படி மூவரின் செயல் அவர்களுக்கு விபரீதமாக மாறும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்கிறார்கள் அரியலூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.