வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்துவருகிறது. அதன்படி தென் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகன மழை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதியான, தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் நெல்லைப் பகுதியிலும் நேற்று காலையிலிருந்தே வெளுத்து வாங்கியிருக்கிறது. திருச்செந்தூரில் மட்டும் 3 மணி நேர கனமழையின் விளைவாய் வெள்ள நீர் நகரச் சாலைகளில் பெருக்கெடுத்திருக்கிறது. குறுகிய நேரத்தில் பெய்த கனமழையின் அளவு திருச்செந்தூரில் 24.06.செ.மீ., காயல்பட்டினத்தில் 30. செ.மீ., தூத்துக்குடியில் 26.04 செ.மீ. என பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக தூத்துக்குடியின் அரசு மருத்துவமனைக்குள்ளும் புகுந்த வெள்ள நீரால் பணியாளர்கள், நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பாதிக்கப்பட்டதுடன் அருகிலுள்ள நீதிமன்றப் பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள், அதிகாரிகளால் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ள நீர் பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் கீதா ஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சிக் கமிஷ்னர் சாருஸ்ரீ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீட்பு பணிகளை விரைவு படுத்தினர்.
திருச்செந்தூரின் செந்திலாண்டவர் ஆலயத்தைக் கிட்டத்தட்ட மழை வெள்ள நீர் முற்றுகையிட்டது. சண்முக விலாசம், ஆலயத்தின் வெளி மற்றும் உட்பிரகாரம் போன்றவைகளில் வெள்ள நீர் ஓடியது. கோயிலின் உட்பிரகாரப் பகுதியில் உள்ள மடை அடைப்பினால் வெள்ள நீர் வெளியே செல்ல முடியாமல் முழங்கால் அளவு தேங்கியதால், ஆலய செயற்பொறியாளர் அழகர்சாமி, மேலாளர் சிவநாதன், பி.ஆர்.ஓ. மாரிமுத்து ஆகியோர் உடனடியாக ஜே.சி.பி.யை வரவழைத்து அடைக்கப்பட்ட மடையைச் சீர் செய்து வெள்ள நீரை வெளியேற்றினர். இதன் காரணமாக ஆலயத்தரிசனத்திற்கு பக்தர்கள் வரமுடியாமல் சிரமப்பட்டனர். நகரின் தாழ்வான பகுதி, ஆலயச் சாலைகள் வெள்ளக் காடாயின.
மூன்று மணி நேரக் கனமழையால் கடற்கரைப் பகுதியான காயல்பட்டினம் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. நகரை ஒட்டிய அருணாசலபுரம் செல்லும் பாதை வெள்ளம் காரணமாக அங்குள்ள தரைப்பாலம் அடைபட்டதால் திசைமாறிய வெள்ள நீர், அருகிலுள்ள 20 குடியிருப்பு வீடுகளில் புகுந்ததால் அந்த வீடுகளின் மக்கள் பல் நோக்குப் புகலிடம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர்.
இடியும் மின்னலுமாய் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தது நேரத்தில் மாவட்டத்தின் நாங்குநேரிப் பகுதியின் முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த பண்டாரம் என்பவர் தன்னுடைய 100 செம்மறி ஆடுகளை அங்குள்ள காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அது சமயம் கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென மின்னல் வெட்டுத் தாக்கியதின் காரணமாக மேய்ச்சலிலிருந்த 20 ஆடுகள் உயிரிழந்தன. இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ஆகும் என்கிறார்கள்.
திருச்செந்தூரில் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்ட கனிமொழி எம்.பி. மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.