கடந்த மாதம் திருச்சி கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபி கண்ணன் என்பவரை ஹீபர் சாலையில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் நடுரோட்டில் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், ஹேமந்த் குமார் என்பவருடைய கொலை வழக்கில் தொடர்புடையதால் பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்டு ஹேமந்த் குமாரின் சகோதரர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்த கண்டோன்மெண்ட் காவல்துறையினர், தனிப்படை அமைத்து மர்ம நபர்களைத் தேடிவந்தனர். இந்நிலையில், இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய முதன்மை குற்றவாளிகளான பிரசாந்த், அர்ஜுன், உதயகுமார், சுரேஷ், நல்லதம்பி உள்ளிட்ட ஐந்து கொலை குற்றவாளிகளைக் கடந்த மே மாதம் 11ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்தக் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட சித்திக் மற்றும் சஞ்சய் ஆகிய இரண்டு இளைஞர்களையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அனுமதித்துள்ளனர். எனவே முக்கியக் குற்றவாளிகள் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளதால், மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கொலை குற்றவாளிகள் 5 பேரையும் பாதுகாப்பு கருதி குண்டர் சட்டத்தில் காவல்துறை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளது.