
மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளச்சேரியில் பல இடங்களில் மழைநீர் தேங்கும் சூழல் தொடர்ந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உறவினர் வீடுகளில் படையெடுத்து வருகின்றனர். பலர் குடும்பம் குடும்பமாக மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கான உணவு பால் ஆகியவற்றை இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவ வீரர்கள் விநியோகம் செய்து வருகின்றனர். வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் தொடர்ச்சியாக ராணுவ வீரர்கள் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.