Skip to main content

ராஜேந்திர பாலாஜியிடம் நடத்தப்பட்ட மூன்று மணி நேர விசாரணை! 

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Three-hour interrogation of Rajendra Balaji!

 

அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று மதியம் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் தமிழ்நாடு தனிப்படை காவல்துறையால் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். ராஜேந்திர பாலாஜியுடன், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக  தலைவர் ராமகிருஷ்ணன், நாகேஷன், அதிமுக நிர்வாகி பண்டியராஜன் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

 

கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி மற்றும் மேற்குறிப்பிட்ட நபர்கள் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு தனிப்படை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

 

காவல் நிலையம் அழைத்து வந்த ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை அதிகாரி கணேஷ் தாஸ் தனியாக 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரிடம் வாக்கு மூலமும் பெறப்பட்டது. புகார் மனுவில் இடம்பெற்றுள்ள தகவல்களையும் யார் யாரெல்லாம் வேலை வாங்கி தரக் கோரி அவரை அணுகினர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் விசாரித்ததாக தெரிகிறது. மேலும் கடந்த 20 நாட்களாக எங்கெல்லாம் இருந்தார் யார் யாரெல்லாம் உதவியது என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. 

 

விசாரணைக்கு பின்னர் ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்த 3 பேரிடம் தனித்தனியாகவும் கூட்டாகவும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யும் போது அவர் தப்ப முயன்ற சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறை காரில் முழுமையாகச் சோதனை செய்தது. 

 

அதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் கரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்