திருமண விழா தொடங்கி காதணி விழா என அத்தனை விழாக்களுக்கு மாமன் சீர் என்பது முக்கியமாக இருக்கும். விழாவுக்கு வரும் அத்தனை பேரும் எவ்வளவு விலை உயர்ந்த பரிசுகள் கொடுத்தாலும் மாமன் சீர் தான் விழா வீட்டார் மனதை நிறைக்கும். அந்த சீர் குறைவாக இருந்தாலும் மனநிறைவு ஏற்படுவது அப்போது தான்.
![m](http://image.nakkheeran.in/cdn/farfuture/zoM_IQIUAYe2OU8KPAOHMc1zlmZf39h6wCUJiv1V-G0/1561318844/sites/default/files/inline-images/mg2.jpg)
30 வருடங்களுக்கு முன்பு வரை இருந்த போக்குவரத்து வாகனம் மாட்டு வண்டிகள் தான். அதிலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு புதுமணத் தம்பதிகள் அலங்கரக்கப்பட்ட கூட்டு வண்டிகளில் வந்தாலே கிராமமே வேடிக்கை பார்க்கும் அப்போது மாமன் சீரும் மாட்டு வண்டியில் தான் வந்தது. அதன் பிறகு டிராக்டர், லாரி, வேன், என்று சீர் கொண்டு போக வேகமாக செல்லும் வாகனங்கள் வந்தது.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்று நடந்த ஒரு காதணி மற்றும் திருமண விழாவிற்கு குப்பக்குடி கிராமத்திலிருந்து மாமன் சீர் கொண்டு வந்த உறவினர்கள் குதிரைகளின் ஆட்டத்துடன் 3 மாட்டு வண்டிகளில் பாத்திரங்கள் போன்ற பொருட்களை ஏற்றிக் கொண்டு மாமன் உறவினர்கள் அலங்கரிக்கப்பட்ட அதே மாட்டு வண்டிகளில் ஏறி மண்டபத்திற்கு வந்தனர்.
![m](http://image.nakkheeran.in/cdn/farfuture/zv5FEPVK9-Au7Shd-NXDkuSiH7bVbeqO_7koCBomp7E/1561318890/sites/default/files/inline-images/mg3.jpg)
பின்னால் பல பொருட்கள் குட்டியானையில் வந்தாலும் மாட்டு வண்டியில் வந்த சீரைப் பார்த்து மொத்த உறவினர்களும் வியந்தனர். பழைய காலம் போல மாட்டு வண்டியில் மாமன் சீர் வந்தது சிறப்பு என்றனர். 70 வயது கடந்த முதியவர்கள் தங்கள் மனைவிகளை பார்த்து புன்னகைத்துக் கொண்டதில் பல அர்த்தங்கள் வெளிப்பட்டது.
![m](http://image.nakkheeran.in/cdn/farfuture/a1MMPiAgsRVQiAPe4aWEF_OR_yweUciVc-cywcod8qY/1561318911/sites/default/files/inline-images/mg_4.jpg)
உன்னை திருமணம் செஞ்சு இப்படி தான் வண்டியில கூட்டி வந்தேன் என்று பழைய சம்பவங்களை நினைவு கூறும் விதமாக இருந்தது அந்த முதியவர்களின் நினைவுகள்.