Skip to main content

ஆன்லைனில் பணம் கேட்டு மிரட்டல்; கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

Threatening to ask for money online; College student passed away


கோவை செட்டிபாளையம் ஏழூரை சேர்ந்த வழக்கறிஞர் முருகேசன், இவரது மகன் கோகுல கிருஷ்ணா (19). பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்த கோகுல கிருஷ்ணா குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் வேலையை செய்துவந்தார்.

 

இந்த நிலையில் கோகுல கிருஷ்ணா சரியாக வேலை செய்யாததால் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, தனியார் நிறுவனம் கோகுல கிருஷ்ணாவிடம் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுடன் இருந்த அவர், கடந்த 18 - 09-2020 அன்று மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

 

சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கோகுல கிருஷ்ணாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக முருகேசன் அளித்த புகார் அடிப்படையில் செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவனின் பெற்றோர்கள் மற்றும் கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன் ஆகியோர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம், ‘தன் மகனின் தற்கொலைக்கு காரணமான குஜராத்தை சேர்ந்த "NAT ENTERPRISE OFFICE AT VAP, என்ற நிறுவனத்தின் மீதும், மகனை தொலைபேசி வாயிலாக பணம் கேட்டு மிரட்டிய "மின்ஹாஸ்" வழக்கறிஞர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகார்  அளித்துள்ளார்கள்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்