வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஏ.சி. சண்முகம் புதிய நீதி கட்சியை தனது முதலியார் சமூகத்தினரை அடிப்படையாக வைத்து தொடங்கினார். அந்த கட்சியின் சார்பாக தேர்தல் காலங்களில் திமுக, பாஜக போன்றகட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் ஏ.சி. சண்முகத்திற்கு தோல்வியே மிஞ்சியது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் முதலியார் சமூகத்தினர் வெற்றியை தீர்மானிக்கும் சமூகமாக இருப்பதால் 2014ல் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அப்பொழுது 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வரை வாங்கி ஏ.சி. சண்முகம் இரண்டாம் இடம் பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளர் அப்துல் ரகுமான் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
திமுகவின் பாரம்பரியமான வெற்றி தொகுதியான வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக மூன்றாம் பிடித்ததால் அது திமுகவிற்கு தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி திமுக விசாரித்தபொழுது, ஏ.சி.சண்முகம் திமுகவில் உள்ள தனது முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களை தன்பக்கம் ஈர்த்து விட்டார் என்கிற தகவல் கேட்டு திமுக தலைமை வேதனையனடைந்தது.
தற்போது நடைபெறும் வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் ஏ.சி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். 2014 ல் கடைபிடித்த அதே தேர்தல் பாலிசியை இந்த முறையும் கடைபிடிக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் திமுக தரப்பினர் வைத்து வந்தனர். திமுகவை சார்ந்த முதலியார் சமூகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலர் ஏசி சண்முகத்திற்காக மறைமுகமாக வேலை செய்து வருவதாக திமுகவினர் கூறிவருகின்றனர்.
அதற்கு ஆதாரமாக நக்கீரனிடம் ஒரு புகைப்படத்தை ஆதாரமாக கட்டினார்கள். அதுபற்றி அவர்கள் கூறும்பொழுது, கடந்த 26ந் தேதி இரவு குடியாத்தம் நகரிலுள்ள செங்குந்த முதலியார் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலரை ஏ.சி. சண்முகம் நேரில் சந்தித்து, முதலியார் சமூக மக்கள் அனைவரும் எனக்கே வாக்களிக்க ஏற்பாடு செய்யுங்கள் என பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் வேலூர் மத்திய மாவட்ட நெசவாளர் அணியின் நிர்வாகிளில் ஒருவரான பி.என்.தட்சிணாமூர்த்தி என்பவர் கலந்துகொண்டு, ஏசி சண்முகம் அருகில் அமர்ந்து நாம் எல்லோரும் நம்ம சமூகத்தை சேர்ந்த ஒருவருக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என சொல்லியுள்ளார்.
திமுகவில் சார்பு அணியிலும் இருந்துகொண்டு முதலியார் சமூக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். இது எந்த விதத்தில் நியாயம் என திமுக விசுவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். இவர் மட்டுமல்ல திமுகவில் இவர்போல் இன்னும் சிலரும் கட்சி பொறுப்புக்களில் இருந்துகொண்டு தங்கள் கட்சி வேட்பாளருக்கு வேலை செய்வதுபோல் நடித்துக்கொண்டே எதிர்போட்டியாளரான ஏ.சி. சண்முகத்திற்கு வேலை செய்கிறார்கள் என்கின்றனர்.
திமுகவினரின் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தட்சிணாமூர்த்தியிடம் கேட்டபொழுது, ''நான் சங்கத்தில் மாவட்ட தலைவராக இருப்பது உண்மைதான். சங்கத்தின் சார்பில் கே.எம்.ஜி. பெரியவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அஞ்சலி செலுத்திவிட்டு நூற்றாண்டு விழா மலரினை வெளியிட்டோம். அந்த நிகழ்விற்கு திடீரென ஏ.சி. சண்முகம் வந்திருந்தார். அவரும் அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கு இருந்தவர்களுடன் அமர்ந்து அரசியல் பேசினார். இதனை கேட்டு அதிர்ச்சியான நான் அங்கிருந்து தூரமாக தள்ளி அமர்ந்துவிட்டேன். எனக்கு வேண்டாதவர்கள் இந்த தகவலை திரித்து பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் கட்சிக்கு விசுவாசமாகத்தான் உள்ளேன்'' எனக் கூறினார்.