கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜோ. ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச நிபுணர் குழுவைக் கொண்டு சோதனை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இந்த வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “மழைக்காலங்களில் தொடர்ச்சியாகவும் மற்ற நேரங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறையும் மேற்பார்வை குழு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய புதிய குழு எதுவும் தேவை இல்லை. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. எனவே முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உரிய அனுமதிகளை வழங்கக் கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.