கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கல்லூர் பகுதியில் மோதிலால் என்பவர் நகைக்கடை மற்றும் வட்டி கடை ஒன்று நடத்தி வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் இவரது கடைக்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களிடமிருந்த வளையல் நகையை அடமானம் வைத்துள்ளனர். அந்த நகையை மோதிலால் பரிசோதனை செய்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகை என்பது தெரிய வந்தது. உடனே மோதிலால், ராமநத்தம் போலீசாருக்கு ரகசியமான முறையில் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே போலீசார், மோதிலாலின் அடகு கடைக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டு இரண்டு பெண்களில் ஒருவர் தப்பித்துச் சென்றார். ஒரு பெண்ணை மடக்கி கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ரோஸ்லின்(56) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தப் பெண் சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கெங்கராம்பாளையம், சிறுபாக்கம் ஆகிய பகுதிகளில் போலி நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றி பணம் பறித்துச் சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதுபோன்று சேலம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு திருட்டு கும்பல் மற்றும் பெண்களைக் கொண்டு போலி நகைகளை அடமானம் வைத்துப் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அந்த கும்பல் இவர்கள் அடமானம் வைத்து கொடுக்கும் பணத்தில் ஆயிரம் ரூபாய் கமிஷனாக தருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரோஸ்லின் என்ற பெண்ணுடன் வந்த ஒரு பெண் மற்றும் சில ஆண்கள் ஒரு ஆம்னி வேனில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.