கரோனா இரண்டாம் அலையின் பரவல் அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முன்களப்பணியாளராக பலரும் கடுமையாக உழைத்து மக்களைப் பாதுகாத்துவருகின்றனர். அந்த வகையில் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள் என முக்கிய துறைகளில் பணி செய்வோரை முன்களப்பணியாளராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோல் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிவோரையும் முன்களப்பணியாளராக அறிவித்திட வேண்டும் என மஜக கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்ததாவது, “தமிழக சுகாதாரத்துறையில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கடந்த 20 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய பணியாளர்களாக சேவையாற்றுபவர்கள், எந்தவிதமான பணி பாதுகாப்போ, மருத்துவ காப்பீடு திட்டமோ இல்லாமல் காசநோய் ஒழிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று மாத்திரை வழங்குவது, சளி பரிசோதனை மற்றும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு வழங்குவது என களப்பணியாற்றிவருகிறார்கள். தற்போது உள்ள கரோனா பெருந்தொற்று காலத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்வது, கரோனா சிகிச்சை பெற்றவருபவர்கள் வீடுகளுக்கே சென்று சளி பரிசோதனைக்கான மாதிரிகள் பெறுவது என அயராது பணியாற்றிவருகிறார்கள்.
இந்த இக்கட்டான சூழலில் இப்பணியாளர்களில் இதுவரை 115 நபர்கள் கரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி, அதில் ஒரு நபர் பலியாகி உள்ளார். எனவே அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் , காசநோய் துறையில் பணிபுரியும் பணியாளர்களை முன் களப் பணியாளர்களாக அறிவித்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு பணிப் பாதுகாப்பில்லாமல் பணிபுரியும் 1,659 பணியாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட, காலமுறை ஊதியத்தில் அவர்களை இணைத்திடவும் பரிசீலிக்க வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்."