திருச்சி மன்னார்புரம் பகுதியில் இயங்கி வரும் எல்பின் நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டு இதுவரை அவர்களுக்கு உரியப் பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றுவதாகத் தொடர்ந்து பல புகார்கள் எழுந்து வருகிறது. கடந்த வாரத்தில் நான்கு கோடி ரூபாய் திருப்பித் தரவேண்டும் என்று ஒரு முதலீட்டாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் ஏஜென்டுகள் 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பலர் பணத்தை முதலீடு செய்து பணம் கிடைக்குமா கிடைக்காதா என்ற பல கேள்விகளோடு இருக்கும் நிலையில் எல்பின் நிறுவன உரிமையாளர் ராஜா ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டு உள்ளார். முதலீடு செய்த அனைவருக்கும் பணம் இம்மாத இறுதிக்குள் திருப்பித் தரப்படும். அதிலும் என் மீது நம்பிக்கை வைத்து இதுவரை எந்தவித புகாரும் கொடுக்காமல் காத்திருக்கக் கூடிய முதலீட்டாளர்களுக்கு மட்டும் இம்மாத இறுதிக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க உள்ளேன். தான் கேட்ட இடத்தில் பணம் கிடைக்க உள்ளது.
என் மீது புகார் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ளட்டும் நான் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறேன் என்னால் தற்போது வெளியே வர இயலாத நிலையில் உங்கள் அனைவருக்கும் இந்த ஆடியோவைப் பதிவு செய்கிறேன்‘ஆல் தி பெஸ்ட்’என்று ஒரு ஒலிப்பதிவை” வெளியிட்டுள்ளார். தற்போது எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்த பலரும் இந்த ஒலிப்பதிவைக் கேட்டு சற்று பெருமூச்சு விட்டாலும் பணம் இம்மாத இறுதிக்குள் கிடைத்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.