அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கூட்டம் இன்று (18.7.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இன்று மதியம் 12:00 மணிக்குத் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
இந்நிலையில் இந்த கூட்டம் தொடர்பாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'பெங்களூருவில் மதச்சார்பற்ற, ஜனநாயகத் தலைவர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடந்தது. பிரிவினைவாத அரசியலின் பிடியிலிருந்து நமது தேசத்தின் பன்மைத்துவ விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் இந்தியா - இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம். தேசியவாதத்தின் முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஏதேச்சதிகாரிகள் இறுதியில் வீழ்வார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. ஒற்றுமையே நமது பலம்; ஒன்றாக இணைந்து இந்தியா வெற்றி பெறும்!' எனத் தெரிவித்துள்ளார்.
Had a historic and constructive meeting in Bengaluru with secular, democratic leaders. We have formed #INDIA - Indian National Developmental Inclusive Alliance, committed to protecting our nation's pluralistic values from the clutches of divisive politics. History has proven that… pic.twitter.com/D1CzDH62uo
— M.K.Stalin (@mkstalin) July 18, 2023