ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுகிறவர்களை பொய் வழக்கு போட்டு சிறை அனுப்புவதை சில சமயம் காவல்துறை செய்வதுண்டு, இதே போல் மயானம் செல்ல அடிப்படை வசதி செய்து தர போராடிய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவரை ரவுடி பட்டியலில் இணைத்து பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது காவல்துறை.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது பூவலை கிராமம். சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த கிராமத்தின் ஒரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இருளர் இன மக்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த 28 சென்ட் பரப்பளவிலான மயானம் மற்றும் மயானத்துக்கு செல்லும் பாதை ஆகியவற்றை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இதனால், பூவலை இருளர் இன மக்களில் யாராவது ஒருவர் உயிரிழந்தால், உடலை பல்வேறு இன்னலுக்கு இடையே மயானத்தில் புதைத்தல் மற்றும் எரியூட்டும் நிலை நீடித்து வந்தது.
இது தொடர்பாக, இருளர் இன மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சார்பில், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன. வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை, உயிரிழந்தவரின் உடலோடு போராட்டம் என பல போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இது தவிர இந்த பிரச்சனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், பூவலை கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 28 சென்ட் நிலம், இருளர் இன மக்களின் மயான நிலம் எனவும், மயானத்துக்கு செல்லும் வழி உட்பட, மயானத்தையொட்டியுள்ள சுமார் 4.70 ஏக்கர் நிலம் அனாதையாக விடப்பட்ட நிலம் எனவும் அறிவித்தது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கடந்த 2021-ம் ஆண்டு பூவலைகிராமத்தில் உள்ள சம்பந்தப்பட்ட 28 சென்ட் நிலத்தை மயானம் எனவும், மயானத்தை ஒட்டியுள்ள, மயான பாதை உட்பட 4.70 ஏக்கர் நிலத்தைபுஞ்சை அனாதையாக விடப்பட்ட நிலம் எனவும், கும்மிடிப்பூண்டி வட்டம் மற்றும் பூவலை கிராம கணக்குகளில் உரிய மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த் துறையினர், ’சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுற்றுச் சுவரை அகற்றி, நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது’ என்ற எச்சரிக்கை பலகையும் வைத்தனர்.
இந்த போராட்டங்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்தது. இந்த போராட்டம் தொடர்பாக முனிரத்தினம், பிரபாகரன், அருள் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற போது நீதிபதியிடம் இவர்களை நக்சலைட் என்று சொல்லியிருக்கிறது காவல்துறை தரப்பு, இதை பொய்யான குற்றச்சாட்டு என்பதை உணர்ந்த நீதிபதி “அப்போது ஏன் இன்னும் ஒரு வழக்கு கூட போடாமல் வைத்திருந்தீர்கள்”, “இது பொய் குற்றச்சாட்டு தானே” என்று காவல்துறையினை கேட்டு நீதிபதி கண்டித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையைத் தொடர்ந்து தற்போது விவசாயிகள் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் ஜெ.அருளை ரவுடி பட்டியலின் இணைத்து காவல்துறை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக அருளை தொடர்பு கொண்டு பேசிய போது “மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்ததற்காக என்னை ரவுடிகள் பட்டியலில் ஆறு மாதங்களுக்கு முன்பு இணைத்திருக்கிறார்கள். அடிக்கடி வீட்டிற்கு வந்து குடும்பத்தினரை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வந்து மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இது உளவியல் ரீதியாக மக்களுக்காக போராடுகிறவர்களை ஒடுக்குவதற்கு எடுக்கிற யுக்தியாகும். என் மீது எதாவது பொய் வழக்கு போடப்படுமேயானால் அது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும்” என்கிறார்.
விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளரை இருளர் மக்களுக்கான அடிப்படை தேவைகளுக்காக போராடியதற்காக குற்றவழக்கு சம்பவ பிண்ணனி சார்ந்தவரைப் போல ரவுடி பட்டியலில் இணைத்தது தவறான செயல் என்று சமூக ஆர்வலர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.