தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரண விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த வழக்கை நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் இன்றே கையில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே, இது தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சாட்சியிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன், விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளருக்கு அனுப்பியுள்ளார்.
அதில், "தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்துள்ளனர். சாத்தான்குளம் காவல்துறையினர் தடயங்களை அழிக்க முயன்றனர், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. தந்தை- மகன் தாக்கப்பட்டதைக் கண்டுபிடிப்பதற்கு கேட்ட லத்தியை சாத்தான்குளம் போலீசார் தர மறுத்துவிட்டனர். பல போலீசார் லத்தியை ஒப்படைத்த நிலையில் காவலர் மகாராஜன் தனது லத்தியை தர மறுத்து விட்டார். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த காவலர் மகாராஜன் ஒருமையில் சொல்லி பேசினார். மற்றொரு காவலர் லத்தியை தர மறுத்து எகிறி குதித்து தப்பி ஓடிச் சென்று விட்டார். சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன. சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் காவலர்கள் நடந்துக்கொண்டனர். காவல் நிலைய சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகள் தினமும் அழியும் படி 'செட்டிங்' செய்யப்பட்டிருந்தது.
விசாரணையை பாதியிலேயே நிறுத்தி விட்டுத் திரும்பி விடும் நிலை ஏற்பட்டது. கூடுதல் எஸ்.பி.யும், டி.எஸ்.பி.-யும் நிகழ்விடத்தில் இருந்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை. லத்தி, டேபிளில், ரத்தக்கறை படிந்துள்ளதாகவும் அதை அழிக்க நேரிடும் எனவும் சாட்சியளித்தவர் கூறினார். சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதி, தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யும்போது அச்சத்துடன் இருந்தார். சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் காவலர்கள் நடந்து கொண்டனர். சாட்சி ஆவணத்தில் கையெழுத்திட மறுத்த பெண் காவலர், உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தப் பின்னரே வாக்குமூலத்தில் சாட்சியம் கையெழுத்திட்டார்.' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.