சாதாரண கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, சாதிப் பிரச்சனையாக மாற மாமனும், மருமகனுமாக இருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். தொடக்கத்திலேயே தடுக்க வேண்டிய போலீசார் அலட்சியமாக இதனை கையாண்டதால் கொலையில் முடிந்துள்ளது என்கின்றனர் அக்கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது உடையார்குளம். இங்குள்ள காந்திபுரத்தில் வசிக்கும் அருணாசலம் மகன் பலவேசம், இதே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைத்தியலிங்கபுரம் வடக்குத் தெருவில் வசிக்கும் தங்கப்பாண்டியன் மகன் முத்துராஜூவிடம், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது வீட்டுமனை பத்திரத்தை கொடுத்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். நாளடைவில் தான் வாங்கிய கடனுக்கு வட்டியும், முதலும் செலுத்தி விட்டதால் பத்திரத்தை திரும்பத் தருமாறு பலவசேம் கேட்டுள்ளதாகவும், “இல்லையில்லை வட்டி மட்டும்தான் செலுத்தியுள்ளீர்கள். அசலை திருப்பித் தந்தாலொழிய பத்திரத்தை திரும்ப தர இயலும்" என முத்துராஜூ மறுத்துள்ளதாகவும் தெரிகின்றது. இந்நிலையில், கடந்த 7ம் தேதியன்று தமிழகமெங்கும் டாஸ்மாக் விற்பனை களைக்கட்டிய நிலையில் முத்துராஜின் தம்பி சண்முக சுந்தரத்திற்கு போன் செய்த பலவேசம், “உன்னுடைய அண்ணன் பணத்தை வாங்கிக்கொண்டு பத்திரத்தை தர மாட்டேன்கிறான்." என பேச, பதிலுக்கு சண்முக சுந்தரமும் பேச வாக்குவாதம் முற்றிய நிலையில் பலவேசம் வீட்டிற்கே தேடி வந்த சண்முகசுந்தரம் கைகலப்பில் ஈடுப்பட்டதாக தெரிகின்றது. இதில் காயமடைந்த பலவேசம் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் செய்ய, போதையில் இருந்த இருதரப்பையும் கவனித்தும், போதையினால் தான் இந்த சண்டை..! சாதாரண கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தான் இது.! என எவ்வித பின்புலத்தையும் ஆராயாத போலீசார், அவசரம் அவசரமாக சண்முகசுந்தரத்தின் மீது சாதி தீண்டாமை வழக்கை பதிவு செய்திருக்கின்றது.
தனது தம்பி சண்முகசுந்தரத்தின் மீது வழக்குப் பதியக் காரணமான பலவேசத்தையும், அவரது மகள் முத்துலெட்சுமியின் கணவர் தங்கராஜையும் பழிவாங்க மழவராய நத்தம், கால்வாய் பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினை சேர்ந்த 15 நபர்கள் கொண்ட கூலிப்படையினரை வரவழைத்த முத்துராஜ், அவர்களை கொண்டு 8ம் தேதி இரவினில் உடையார் குளத்திலுள்ள பலவேசம் வீட்டிற்குள் புகுந்து வெட்டியிருக்கின்றனர். இதில் சம்பவ இடத்திலேயே பலவேசமும், அவரது மருமகனும் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தான்குளம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். “சாதாரண கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இது.! இதனுடைய பின்புலத்தை விசாரிக்காமல் போலீசாரின் அஜாக்கிரதையால் வேறொரு வழக்குப் பதிவு செய்ய இப்பொழுது கொலையில் முடிந்திருக்கின்றது விவகாரம். இது முடிவு அல்ல.! இனிமேல் தான் ஆரம்பம்.. குறிப்பிட்ட இரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இணக்கமாக இருந்தததை காவல்துறையே அழித்துவிட்டு புதிய பிரச்சனைக்கு சுழிப் போட்டுள்ளது. உள்ளூர் மக்களைக் கொண்டு இந்த பிரச்சனையை முடித்திருக்கலாம். அடுத்த ஊர்க்காரங்க வந்ததால்தான் இப்பிரச்சனையே!! நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் இரு தரப்பும் உயிரை கையில் பிடித்தபடி இருக்கின்றது." என்கின்றனர் அப்பகுதியினை சேர்ந்த பொதுமக்கள்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கொலையில் முடிந்துள்ளதற்குக் காரணம் கூலிப்படைகளாக செயலாற்றிய அருகிலுள்ள ஊர்க்காரர்களே என்பதால், மக்களின் கோபத்தை தனிக்கும் விதமாக உடையார்குளத்தில் புறக்காவல் நிலையத்தை அமைக்கவுள்ளதாக சமாதானப்படுத்தி வருகின்றது காவல்துறை... எனினும், விவகாரம் முற்றுப் பெறவில்லை.!!