தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், 'ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று முடிவெடுத்தது கொள்கை முடிவு. ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு விளைவிக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஒருதலைப்பட்சமாக உயர்நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது என்ற ஸ்டெர்லைட் வாதத்தை அவமதிப்பு என்றே கூற வேண்டும். இந்த காரணத்திற்காகவே ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.