சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கை விரிவான உத்தரவுக்காக ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன் இன்று (02/07/2020) காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதிய பாதுகாப்பை உறுதி செய்து தலைமைக் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி.-யின் நடவடிக்கை உள்ளதாக பாராட்டுத் தெரிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட தந்தை- மகன் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி. உள்ளது. தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவருக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். 107 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்பட்டிக்கு குற்றவாளிகளைக் கொண்டு செல்வது கடினம் என்பதால், தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் முன் குற்றவாளிகளை ஆஜர்படுத்தலாம்.
சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது. சமுதாய வாழ்க்கை முன்னேறிய நிலையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது இயல்புக்கு மாறானது. 24 மணிநேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்தன் மூலம் தமிழக போலீஸ் மீதான நம்பிக்கை உறுதியாகியுள்ளது. பறிமுதல் செய்த பொருட்களை நீதிமன்ற சொத்து அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். நீதிமன்ற வழியாக அல்லாமல் தடயங்களை நேரடியாக தேவையான பரிசோதனைகளுக்கு அனுப்பலாம். கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணையின் இறுதி அறிக்கையும் டி.எஸ்.பி. அனில்குமாரிடம் ஒப்படைக்கப்படும்.
போலீசார் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் நிலையில் கரோனா காலத்தில் மிகவும் மோசமானதாக இருக்குமே என்று கவலை தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை விரிவான உத்தரவுக்காக ஒத்திவைத்துள்ளனர்.
உயர்நீதிமன்றக் கிளை உத்தரவையடுத்து, சாத்தான்குளம் அருகே அரிவான்மொழியில் உள்ள பெண் காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு பெண் காவலர்கள் உள்பட நான்கு காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே வழக்கு விசாரணையின் போது, சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தொலைபேசி வாயிலாக பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.