தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் மரண வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) பால்துரை உள்பட ஐந்து காவலர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைதான ஐந்து பேரையும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அதையடுத்து நீதிபதி 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் ஜூலை 23- ஆம் தேதி ஐந்து பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து காவலர்கள் சாமத்துரை, வெயிலுமுத்து, செல்லத்துரை ஆகிய மூன்று பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ. பால்துரை, காவலர் தாமஸ் பிரான்சிஸ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பேரூரணி சிறையில் இருந்த காவலர்கள் சாமத்துரை, வெயிலுமுத்து, செல்லத்துரை ஆகிய மூவரும் பாதுகாப்பு கருதி மதுரைச் சிறைக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரும் பாதுகாப்பு கருதி மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.