தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், எஸ்.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவர்கள் மீது கொலை வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதில் ரகு கணேஷ் தூத்துக்குடி முதன்மைக் குற்றவியல் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின் பேரில், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பேரூரணி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன் இன்று (02/07/2020) காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதிய பாதுகாப்பை உறுதி செய்து தலைமைக் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி.-யின் நடவடிக்கை உள்ளது. பாதிக்கப்பட்ட தந்தை- மகன் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி. செயல்படுகிறது என நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.